Saturday, November 29, 2014

எளிய தமிழ் எளிய அறிவியல்


எளிய தமிழ் எளிய அறிவியல்

அறிவியல். அறிந்துகொள்ளும் யாவும் அறிவியல் பாற்பட்டவையே. என் சிறுவயதில் எனக்குள் கிளைத்த பல்வேறு கேள்விகளில் சிலவன மட்டுமே அன்றைய ஆசிரியர்களால் எனக்குப் பதிலளிக்கப்பட்டிருக்கின்றன. ஏனையவை பெரும்பாலும் நான் தேடிப்படித்துணர்ந்தவைகள்தான். அதிலும், அவைகள் தமிழில் இல்லாததால் விளக்கங்கள் அத்தனை எளிதில் எனக்கு வசப்பட்டுவிடவில்லை. என்னைப்போன்றே பலரும் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் பிற்பாடு சில இணையவழி குழுக்களில் எளிய தமிழில் எளிய அறிவியல் விளக்கங்களைப் பதிந்து வந்திருந்தேன். அவற்றிற்குப் படியெடுத்து வைத்தவைகள் வெகு சிலவே. ஒரு சமயத்தில் எம் முகநூல் குழு ஒன்று திடீரென்று காணாமல் போனதில் ஏகப்பட்ட வருத்தம். அத்தோடு என் பதிவுகளும் அழிந்துபட்டுப்போயின. படி இருப்பவைகளை பலரும் அறியும் வண்ணம் என் முகநூல் சுவற்றில் பதிந்து வந்தேன். வலைப்பதிவேற்றத்தினை இன்று முதல் தொடங்குகிறேன். இன்று எளிய தமிழில் அறிவியலைக் கொணர எத்தனையோ முயற்சிகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவ்வழியில் எனது பங்களிப்பாகவும் இந்நூல் அமையும் என்பது என் எதிர்பார்ப்பு.

இப்பதிவுகள் முழு அறிவியல் விளக்கங்களைக் கொண்டிருக்கப் போவதில்லை. மாறாக, அறிவியலின் பல்வேறு கூறுகளை உங்களுக்கு அறிமுகம் செய்வதோடு, அதன்பால் ஆர்வத்தைத் தூண்டி மேலும் தேடிப்படிக்கவே வாய்ப்பாக அமையும் என்ற எண்ணத்திலேயே இதனை ஆக்கியுள்ளேன். கூடியமட்டில் எளிய தனித்தமிழ் சொற்களையே கையாண்டிருக்கிறேன்.

அறிவியல் செய்திகள் அழகுத் தமிழில் எங்கும் பரவிட வேண்டும். இது போல் யாவரும் முயற்சி செய்திடவும் வேண்டும். ஆக்கும் முன்னும் பகிரும் முன்னும், சரியான செய்தியைத்தான் கொண்டு சேர்க்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை தெளிவுபடுத்திக்கொள்ளுதலும் வேண்டும். தனித்தமிழ் அறிவியல் வளரட்டும், தமிழின் வளமை பெருகட்டும்.

குறிப்பு: நானொன்றும் அனைத்தும் அறிந்த மேதையல்ல. அனைத்தும் என் சிந்தனையிலோ, விரல் நுனியிலோ இல்லை. தெரியாதவற்றை பல தளங்களில் தேடியும், உறுதிப்படுத்தியும்தான் என் நடையில் தருகின்றேன்.