Tuesday, April 27, 2021

 


ஓசோன் சிதைவு (Ozone Layer Depletion)

ஓசோன் படலம், ஓசோன் படலம்னு சொல்றாங்களே... அதுல ஓட்டை வேற விழுகுதுன்னு சொல்றாங்களே.... நாம ராக்கெட்லாம் விடுறோமே அதுனாலதான் அதுல ஓட்டை விழுகுதா?

கேள்வி சிரிப்பு வர்ற மாதிரி இருந்தாலும், இதைக் கேட்டதாலதான் நாம தெளிவடையப்போறோம். முதல்ல ஓசோன் அப்டீன்னா என்னன்னு பாத்துருவோம்.

நமக்கெல்லாம் ஆக்சிஜன்(Oxygen)னா என்னன்னு தெரியும். தமிழ்ல உயிர்வளின்னு சொல்லுவோம். அது எப்பயும் ரெட்டையாத்தான் இருக்கும். அதான் அதுக்கு அவஸ்தை இல்லாத சாஸ்வதமான நிலை. அதைக் குறியீடா சொல்லும்போது O↓2. (Oக்கு அடுத்து அடிமானத்துல 2 போட்டுக்கனும்)

ஆனா, ரொம்ப அரிதா, இந்த ஆக்சிஜன் ஒரே ஒரு அணுநிலை (Nascent)ஆக்சிஜனாவும், முவ்வணுநிலை (Trioxygen) ஆக்சிஜனாவும் இருக்கும். இது நிலையானது இல்லை.

ஏன்னா, போதுமான எலக்ட்ரான்களோட திருப்தியா இருக்கத்தான் எல்லா அணுக்களும் விரும்பும். போதுமான எலக்ட்ரான்கள் இல்லாட்டியோ, குறைந்தபட்சம் பகிர்ந்துகொள்ளும் எலக்ட்ரான்கள் இல்லாட்டியோ அது பயங்கரமான பசியோட இருக்கும். எதையாச்சும் பிடிச்சு இழுத்து போதுமான எலக்ட்ரான் கிடைக்கிற மாதிரி செஞ்சுக்கிட்டு நிலையான தன்மைக்குப் போகத்தான் பார்க்கும்.

மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்து இருக்குற நிலையைத்தான் ஓசோன்(Ozone)னு சொல்றோம். தமிழ்ல கமழின்னு சொல்வோம். இது நிலையா (Stable) இருக்காதுன்னு சொன்னேன். அதுனால, பூமியில இதை சாதாரணமா பாக்க முடியாது. ஒரு வேளை ஓசோன் உருவானாக்கூட அது டக்குனு பக்கத்துல என்ன கிடைக்குதோ அதுல இருந்து ஒரு எலக்ட்ரானை எடுத்துக்கிட்டு வேற ஒன்னா மாறிரும்.

உதாரணமா சொல்றதுன்னா, நடிகர் செந்தில் ஒரு படத்துல எல்லார்கிட்டயும் பத்துக்காசு கேப்பாரு. அவரு பத்துக் காசுல திருப்தியா இருப்பாரு. பத்துக்காசுக்கு மேல எவ்ளோ கொடுத்தாலும் பத்துக் காசை மட்டும் வச்சுக்கிட்டு மிச்சத்தைத் தூக்கிப் போட்டுருவாரு. பத்துக்காசுக்கு கீழ கொடுத்தா வாங்க மாட்டாரு. பத்துக்காசு கொடுக்குற வரைக்கும் விடவும் மாட்டாரு.

அது மாதிரிதான் ஆக்சிஜன் ஒத்தையா இருந்துச்சுன்னா, இன்னொரு ஒத்தையா இருக்குற ஆக்சிஜனைப் பிடிச்சுக்கிட்டு ரெட்டை ஆக்சிஜனா மாறி நிம்மதியா இருந்துரும். அப்படி நிம்மதியா இருக்குற ஆக்சிஜன் இன்னொரு ஆக்சிஜனைத் தேடிப் போகாது. ஆனா, எதாச்சும் புறத் தூண்டுதல்னால மூணாவது ஆக்சிஜன் அது கூட சேர்க்கப்பட்டு ஓசோனா மாறுச்சுன்னா, எப்டீயாச்சும் அந்த மூணாவது ஆக்சிஜனைத் தள்ளிவிடத்தான் பார்க்கும். தள்ளியும் விட்டுரும்.

சரி, இப்ப ஓசோன் எப்படி உருவாகுது. வளிமண்டலத்துல பூமியில இருந்து 15 கிலோமீட்டர் உயரத்துல துவங்கி 50 கிலோ மீட்டர் உயரம் வரைக்கும் இருக்குற அடுக்குக்குப் பெயர் படைமண்டலம் (Stratosphere). இங்கதான் ஓசோன் உருவாகுது. எப்டீன்னு பார்த்தா, சூரியன்ல இருந்து வர்ற புறஊதாக்குறுவலைகள் ஆக்சிஜனுடன் (O↓2) வினைபுரிஞ்சு அதனை இரண்டாப் பிரிக்குது. அப்படிப் பிரிஞ்ச ஒற்றை ஆக்சிஜன் மற்றொரு இரட்டை ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோனாக மாறுகின்றது.

O↓2 + photon (radiation λ < 240 nm) → 2 O

O + O↓2 + M → O↓3 + M

இங்க Mங்குறது வினையில விளையுற அதிகப்படியான சக்தியைக் கடத்திச் செல்லும் ஏதேனும் ஒரு கடத்தி. இப்படி உருவாகுற ஓசோன், நிலையா இருக்காம, மறுபடியும் ஒரு ஒத்தை ஆக்சிஜன் கூட சேர்றதுனால, ரெட்டை ஆக்சிஜனா மாறிரும்.


O↓3 + O → 2O↓2


இப்டீயே இந்த நிகழ்வு மாறி மாறி நடந்துக்கிட்டு இருக்குறதுனால, இந்த ஸ்ட்ரேட்டோஸ்பியர்ல ஓசோன் ஒரு படலமா அப்டீயே பரவி இருக்கு. படலம்னா, ஒரு மெல்லிய அடுக்கா, 2ppmல இருந்து 8ppm வரைக்கும் இருக்கும். இங்க இருக்குற ஒட்டுமொத்த ஓசோனையும் கீழ கடல்மட்டத்துக்கு கொண்டு வந்தோம்னா, அழுத்தத்தின் காரணமா, இரு 3 மில்லிமீட்டர் தடிமனுக்குதான் வரும்.


ஓசோன் என்ன பண்ணுது?

சூரியன்ல இருந்து வர்ற புறஊதாக் கதிர்களை இது ஈர்த்துக்குறதுனால நாமள்லாம் அந்தக் கதிர்ல இருந்து பாதுகாக்கப்படுறோம். புறஊதாக் கதிர்கள் அவ்ளோ ஆபத்தான்னு கேட்டா. ஆமாம், ஆபத்துதான். அதுக்கு முன்னாடி இந்த புறஊதாக் கதிரை அலைநீளத்தைப் பொறுத்து மூணு விதமா வகை பிரிச்சுருக்குறதைப் பார்த்துருவோம்.

  1. UV-A (400–315 நானோமீட்டர்கள்)
  2. UV-B (315–280 நானோமீட்டர்கள்)
  3. UV-C (280–100 நானோமீட்டர்கள்)

இது போக Vacuum UV (10–100 நானோமீட்டர்கள்)னு ஒன்னு இருக்கு. இதை காற்றிலுள்ள நைட்ரஜனே வடிகட்டிவிடும். ஆனால், மேலே சொன்ன அந்த மூணு வகைகளும் நைட்ரஜனையும் ஊடுருவிக்கிட்டு போயிரும்.

UV-A ரொம்ப ஒன்னும் ஆபத்து இல்லாதது. ஆனாலும், நம்ம தோல் மேல தொடர்ந்து படும்போது மட்டும் ஏதாச்சும் பாதிப்பு ஏற்படும். தோல் சுருங்கி சீக்கிரமே வயசான தோற்றத்தைக் கொடுக்கும். இது ஓசோனை படலத்தைத் தாண்டியும் பூமிக்கு வரும்.

UV-B கொஞ்சம் ஆபத்தானது. தோல் வெந்து போயிரும், நம்ம திசுக்கள்ல உள்ள DNAக்களைப் பாதிக்கும். காடராக்ட் வரும், உடலின் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். ஓசோன் கொஞ்சம் தடுத்தது போக மீதி சிறிது பூமிக்கு வரும். பூமி மேல இருக்குற உயிரினங்களுக்கு இது கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தும். இதுதான் நம் தோல் வைட்டமின்-D தயாரிக்கிறதுக்கு உதவியா இருக்குறதும்.

UV-C இது ரொம்ப ஆபத்தானது. ஆனா, ஓசோன் இதை முழுசா உறிஞ்சித் தடுத்துறதுனால இது பூமியோட தரைக்கு வராது. வந்தா, தோல் சம்பந்தமான வியாதிகளை உண்டு பண்ணும். ஸ்கின் கான்சர் ஏற்படும். (Basal Cell Carcinoma, Squamous Cell Carcinoma, Melanoma)


ஓசோன் படலத்துல ஓட்டைன்னா என்ன?

ஓட்டைன்னா துணியில விழுற ஓட்டை மாதிரி இல்லை, ஆனா, அதை ஒரு உருவகமா எடுத்துக்கலாம். மெல்லிய படலம் மாதிரி ஓசோன் பரவி இருக்கும்போது, சில காரணிகளால அந்த ஓசோன் சிதைக்கப்பட்டு, ஓசோன் உருவாகுற வேகத்தை விட அது அழிந்துபட்டுப் போற வேகம் அதிகமா இருந்துச்சுன்னா, அந்தக் குறிப்பிட்ட இடத்துல ஓசோன் செறிவு குறைஞ்சு போயிரும்.

அப்ப அதுவழியா புறஊதாக் கதிர்கள் பூமிக்குள்ள ஊடுருவி வந்துரும். அதுனால, அதை ஓட்டைன்னு சொல்றோம்.


ஓசோன் படலத்துல ஏன் ஓட்டை விழுகுது?

Free Radical Elementsனு சொல்லப்படுற நைட்ரிக் ஆக்சைடு (NO), நைட்ரஸ் ஆக்சைடு (N↓2O), ஹைட்ராக்சைல் (OH), அணுநிலை க்ளோரின் (Cl), அணுநிலை ப்ரோமைன் (Br) ஆகியவைகள் இந்த ஓசோனைக் கபளீகரம் செய்து விடும்.

ஏன்னு பாத்தா, அவைகளோட தன்மை அப்படி. அதிதீவிரமா வினை புரியக்கூடியவை அவை. காரணம், அவைகளோட எலக்ட்ரான் சுற்றுப்பாதையில போதுமான எலக்ட்ரான் இருக்காது. நிலைப்படனும்னா எதுல இருந்தாவது எலக்ட்ரானை எடுத்துக்கனும். இதுக்கு இருக்குற தேவையைப் பார்க்கும்போது இது எடுத்துக்கும்னு சொல்ல முடியாது, பறிச்சுக்கும். ஆமா, அவ்வளவு வெறியோட பறிக்கும்.

சரி, இதெல்லாம் எங்கேருந்து வருதுன்னு பார்த்தா, எல்லாம் நாம உற்பத்தி வேதியல் பொருட்களில் இருந்துதான். Ozone Depleting Substances (ODS)னு சொல்வாங்க. என்னென்னன்னு பார்த்தா,

  1. Chlorofluorocarbons (CFCs)
    • நம்ம ஃப்ரிட்ஜ், ஃப்ரீஸர், ஏர் கண்டிஷனர்லலாம் இதைப் பயன்படுத்துனோம். ஆமா, 1995க்கு முன்னாடிலாம் இதுதான் கூலன்ட்டா பயன்பட்டுச்சு. இதுதான், 80% ஓசோன் சிதைவுக்கு காரணமா இருக்கு. தொழிற்சாலையில் பயன்படுத்தும் கரைப்பான்கள் (Solvents), ட்ரை க்ளீனிங் பொருட்கள், மருத்துவமனை நுண்ணுயிர்நீக்கிகள் (Sterilants) போன்றவற்றிலும் இது இருக்கு.
  2. Halons
    • சில தீயணைப்பான்கள்ல இது பயன்படுத்தப்படுது. தண்ணீர் மற்றும் சில வேதியல் பொருட்களைப் பயன்படுத்த முடியாத தீ விபத்துகளில் இது பயன்படுத்தப்படும். CFCsக்கு இணையா இதுவும் பெரும் பாதிப்பை ஓசோம் படலத்துக்கு கொடுக்கும்.
  3. Mehtyl Chloroform
    • தொழிற்சாலைகளில், ஆவிக்கொழுப்புநீக்கியாகவும் (Vapour Degreaser), ஏரோசால்களிலும் இது பயன்படுத்தப்படும்.
  4. Carbon Tetrachloride
    • சில கரைப்பான்களிலும், தீயணைப்பான்களிலும் இது பயன்படுத்தப்படும்.
  5. Hydrochlorofluorocarbons (HCFCs)
    • CFCsக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த HCFCs குறைந்த அளவே ஓசோன் படலத்துக்கு ஊறு விளைவிக்கும். பசுமைக்குடில் விளைவுக்கு இது துணை போய் புவிவெப்ப உயர்வுக்கு இது காரணமாக இருக்கும்.

இவைகள் எல்லாம் பூமியில ரொம்ப ஆபத்தில்லாத பொருட்கள். நிலையானவைகள். விஷமற்றவைகள். நிலையா இருக்குறதுனால, அது அப்டீயே காத்துல மிதந்து மேலே மேலே போயி ஸ்ட்ரேட்டோஸ்பியருக்குப் போனதும், அங்கே புறஊதாக்கதிர்கள்னால உடைக்கப்பட்டு அணுநிலைக் க்ளோரினாவோ, ப்ரோமினாவோ உருவானா அவ்வளவுதான்.

ஓசோனை பலமடங்கு அபாயகரமான வேகத்துல தின்னு தீர்த்துரும். ஒரே ஒரு க்ளோரின் மூலக்கூறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைச்சுரும்.

இந்த ODS நீண்ட காலத்துக்கு நம்ம வளிமண்டலத்துல இருக்கும். நீண்ட காலம்னா, நூற்றாண்டுக்கும் மேற்பட்டு இருக்கும். கடந்த 80 வருசத்துல நாம இப்டீ உருவாக்குன ODS எவ்ளோ இருக்கும், எவ்ளோ காலம் இருக்கும்னு ஒரு குத்துமதிப்பா கணக்குப் போட்டுப் பாத்துக்குங்க.

ஆக, ஓசோன் படலத்தை, நாம விடுற ராக்கெட்டோ, ஜெட் விமானமோ போய்க் கிழிக்கிறது இல்லை. நம்மோட பொறுப்பில்லாத்தனத்தால அபாயகரமான பொருட்களை உண்டு பண்ணி, நமக்கு நன்மை தர்ற ஓசோன் படலத்தைச் சிதைச்சுட்டு... ஓசோன்ல ஓட்டை விழுந்துருச்சுன்னு, என்னவோ அதுவா விழுந்த மாதிரி சொல்றோம்.


மேலதிகச் செய்திகள்

  1. மார்கழி மாசத்துல ஓசோன் கீழ வரும் அதுனாலதான் விடியக்காலையில எந்திரிச்சு குளிச்சுட்டு கோலம் போடுறதுன்னு நம்ம முன்னோர்கள் வகுத்து வச்சுருக்காங்கன்னு ஒரு கதை சொல்வாங்க.
    • நாம மேலே பாத்த ஸ்ட்ரேட்டோஸ்பியர் ஓசோன் கீழ வராது. வந்தாலும் ரொம்ப ரொம்பக் குறைவு, அரிது. ஆனா, ட்ரோபோஸ்பியர் ஓசோன்னு சொல்லக்கூடிய, கீழேயே நாம உருவாக்குற ஓசோனும், சில தாவரங்கள் வெளிவிடுற ஹைட்ரோகார்பன்கள்ல இருந்து வர்ற ஓசோனும் உண்டு. ஆனா, இந்த ஓசோன் ஒன்னும் நல்லது இல்லை. நமக்கு சுவாசப் பிரச்சனைகளை உண்டு பண்ணும். பயிர்களுக்கும் காடுகளுக்கும் கேடு விளைவிக்கும். நைலான், ரப்பர் போன்ற பொருட்களை அழிக்கும். நம் உடல் திசுக்களையும் சிதைக்கும்.
    • ஏற்கனவே சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள், வீட்டிற்கு வெளியே உடற்பயிற்சி செய்தால் நிலைமை இன்னும் மோசமாகும். தாவரங்களின் Stomata பகுதியை அடைத்து விடும். இதன் வழியாகத்தான் கார்பன்டையாக்சைடு உள்ளே செல்லும். இது தடைபட்டுப் போவதால் ஒளிச்சேர்க்கை நடக்காது போய் தாவரம் பாதிப்பிற்கு உள்ளாகும்.
  2. க்ளோரின் போட்டு ப்ளீச்சிங் பண்ணும்போது, கறையெல்லாம் போயி பளிச்சுனு வெள்ளையாகுறதுக்குக் காரணம் க்ளோரின் இல்லை. க்ளோரினோடு நீர் வினைபுரியும்போது உருவாகுற ஒற்றை ஆக்சிஜன்தான் காரணம். கறைங்குறது சில அலைநீளங்கள் கொண்ட ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்ட க்ரோமோஃபோர்கள் (Chromophores). ஒற்றை ஆக்சிஜன் நிலையற்றதுன்னு பார்த்தோம். அது நிலை பெறுவதற்காக எதுகூடவாவது சேரத் துடிக்கும்போது, இந்தக் க்ரோமோஃபோர்களோடு வினைபுரிந்து ஒளி உறிஞ்சும் தன்மையைப் பாதிக்கும். விளைவு கறை போய்விடுகிறது.
  3. வீட்டில் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கும் தண்ணீர் சில நாட்களில் கெட்டுப் போய் விடுகின்றது. ஆனால், ஊருணி நீர் திறந்தவெளியில் இருந்தாலும் கெட்டுப் போவதில்லை. காரணம், சூரியனில் இருந்து வரும் UV-B கதிர்கள்தான் காரணம். ஊருணி நீரில் இருக்கும் நுண்ணுயிரிகளைத் தாக்கி அழித்து விடும்.


படம் எடுக்கப்பட்ட தளம் :
http://upload.wikimedia.org/wikipedia/commons/e/ea/NASA_and_NOAA_Announce_Ozone_Hole_is_a_Double_Record_Breaker.png


1 comment:

  1. The Most Fascinating Casino Site In India
    With an Indian theme and over 1000 slots games and a range of table games, LuckyClub is a great place to luckyclub.live play Indian casino games in your Live Casino India: 1.888Casino Welcome Bonus: 100% up to ₹8000 Deposit MatchBonus: 100% up to ₹8000 Rating: 4.6 · ‎Review by Lucky Club

    ReplyDelete