புடைநொடி (Parsec) என்றால் என்ன?
வானவியலில் ஒளியாண்டைப் (Light Year) போல இந்தப் புடைநொடியும் தொலைவை அளக்கும் ஒரு அலகாகும். PARallax of SECond என்பதின் முதல் எழுத்துகளைக் கொண்டு குறுக்கமாக இதன் பெயர் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு புடைநொடி என்பது 3.26 ஒளியாண்டுகள் ஆகும். பிரித்தானிய வானவியலாரான Herbert Hall Turner என்பவரால் 1913ல் இந்த அலகு பரிந்துரை செய்யப்பட்டது. எண்ணிப்பார்க்க முடியாத பெரும் தொலைவுகளைக் குறிக்க இந்த அலகு வானவியலிலும் (Astronomy), வானியற்பியலிலும் (Astrophysics) பெரிதும் பயன்படுகின்றது.
அதிலும், நமது உடுமண்டலத்தி(Galaxy)ற்குள்ளான தொலைவுகளை Parsec அளவிலும், நம் உடுமண்டலத்தைச் சுற்றியுள்ள தொலைவுகளை Kilo Parsec அளவிலும், அண்டை உடுமண்டலங்களை Mega Parsec அளவிலும், அதனைவிடத் தொலைவில் உள்ள உடுமண்டலங்கள், துடிப்பண்டங்கள் (Quasars) போன்றவற்றின் தொலைவுகளை Giga Parsec அளவிலும் குறிப்பிடுவார்கள்.
சரி, Parsec என்றால் என்ன என்று விளக்கமாகப் பார்ப்பதற்கு முன், இடமாறு தோற்றவழு (Parallax) என்றால் என்னவென்று ஒரு பார்வை பார்த்து விடுவோம்.
இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரு பொருளைப் பார்க்கும்போது ஏற்படும் இடமாற்றத் தோற்றமே பாரல்லாக்ஸ் எனப்படும். இதனை கோண அளவில் அளப்பார்கள். சிறு உதாரணம் மூலம் சொல்வதாயிருந்தால், உங்கள் கட்டை விரலை முகத்திற்கு நேராக நீட்டிப் பிடித்துக்கொண்டு ஒரு கண்ணை மூடிக்கொண்டு உங்கள் கட்டை விரலைப் பாருங்கள். அடுத்து, மறு கண்ணை மூடிக்கொண்டு இந்தக் கண்ணைத் திறந்து பாருங்கள். கட்டைவிரல் இடம் பெயர்ந்து இருப்பது போல் தோன்றும்.
உண்மையில் கட்டைவிரல் இடம் பெயரவில்லை. நாம்தான் இரு வேறு இடங்களில் இருந்து கட்டைவிரலின் நிலையான இடத்தைப் பார்த்தோம். ஆனால், கட்டைவிரல் இடம் பெயர்வது போல் தோன்றுவதால் இதனை இடமாறு தோற்றவழு என்கிறோம்.
இதனால் பயன் என்ன? முன்புறம் கண்கள் கொண்ட நமக்கு, இரு கண்களும் சற்று இடைவெளியில் அமைந்திருப்பதால், ஒரு பொருளின் தொலைவை மட்டுமல்லாது, அதன், ஆழத்தையும் சேர்த்து முப்பரிமாணக் (3 dimension) காட்சியைக் காண முடிகிறது. ஒரே வரிசையில், இருவேறு தொலைவுகளில் உள்ள பொருட்களின் அளவுகளை உணர்ந்து கொள்ளவும், அவற்றிற்கிடையே இருக்கும் தொலைவுகளை அனுமானிக்கவும் முடிகிறது.
நுட்பமுறைகளில் இந்த பாரல்லாக்ஸ் முறையினைக் கொண்டு பார்வையாளருக்கும், பார்க்கப்படும் பொருளுக்கும் இடையே உள்ள தொலைவை அளக்கலாம்.
அதற்கு முன், முக்கோண அளக்கை (Triangulation) என்றால் என்ன என்று ஒரு சிறு பார்வை பார்த்து விடுவோம். ஒரு புள்ளியின் இடத்தை தெரிந்த இருவேறு தொலைவுகளில் இருந்து பார்க்கும்பொழுது ஏற்படும் கோணங்களைக் கொண்டு கணக்கிடுவது முக்கோண அளக்கை முறையாகும். இதற்கு முக்கோணவியல் (Trignometry) கணக்கீடுகள் உதவும். பிதாகரஸ் தேற்றம் (Pythagorus Theorem) படித்தவர்களுக்குத் தெரியும். ஒரு செங்கோண முக்கோணத்தின் அடிப்பகுதியின் நீளமும், குத்துயரத்திற்கு எதிரே உள்ள கோணமும் தெரிந்தால் குத்துயரத்தை அளந்து விடலாம்.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்த முக்கோண அளக்கை முறையில்தான் அளந்தார்கள். 8840 மீட்டர் உயரம் என்று 1856ல் கண்டறியப்பட்ட உயரம், பிற்பாடு நவீன GPS முறையில் கணக்கிடப்பட்டு 8848 மீட்டர் உயரம் என்று அறிவிக்கப்பட்டது.
சரி, இப்பொழுது மீண்டும் பாரல்லாக்ஸ் முறைக்கு வருவோம். மேலே பார்த்த, முக்கோண அளக்கையின் ஒரு சிறப்பு முறைதான் பாரல்லாக்ஸ். என்ன ஒன்று, தொலை தூரத்து நட்சத்திரங்கள், காலக்ஸிகளின் தொலைவுகளை அளக்க இதைப் பயன்படுத்துவார்கள்.
Diurnal Parallax, Lunar Parallax, Solar Parallax, Moving-Cluster Parallax என்று சில முறைகள் இருக்கின்றன. அளக்க வேண்டிய தொலைவைப் பொறுத்து முறைகளைத் தெரிந்தெடுப்பார்கள்.
எப்படி அளப்பார்கள்?
தொலைவு அதிகம் என்பதால், பூமியிலேயே இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு நட்சத்திரங்களின் தொலைவை அளக்க முடியாது. பின் என்ன செய்வது. பூமியை விட்டு வெளியே இரண்டு பெரும் தொலைவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதாவது சூரியன் ஒரு புள்ளியாகவும் பூமி ஒரு புள்ளியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றை பூமியில் இருந்து ஒரு நேரத்தில் நோக்கும்பொழுது ஒரு கோணமும், மூன்று மாதங்கள் கழித்து அதே நேரத்தில் அந்த நட்சத்திரத்தை நோக்கும்பொழுது கோணவேறுபாடும் இருக்கும். அது என்ன மூன்று மாதங்கள் கணக்கு என்றால், அப்பொழுதுதான் ஒரு வானவியல் அலகு தூரத்தைக் கடந்திருப்போம். கணக்கீட்டிற்கு இந்தத் தொலைவும் நமக்கு வேண்டும்.
அதாவது, பாரல்லாக்ஸ் கோணவேறுபாடு மற்றும் வானவியல் அலகு இவற்றைக் கொண்டு அளக்கப்படும் தொலைவை புடைநொடியி(ParSec)ல் குறிப்பிடுவார்கள். கோணவேறுபாடு 1 பாகைநொடி இருக்கும்பொழுது கிடைக்கும் தொலைவு 1 புடைநொடி (1 ParSec) என்பார்கள்.
1 புடைநொடி = 3.26 ஒளியாண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
படங்கள் எடுக்கப்பட்ட தளம் :
- http://ta.wikipedia.org/wiki/படிமம்:புடைநொடி.png
- http://en.wikipedia.org/wiki/File:Stellarparallax_parsec1.svg
மேலதிகச்செய்திகள்
- இந்தியாவை நிலஅளவை செய்வதற்காக Great Trignometrical Survey of India என்னும் திட்டம், ஏப்ரல் 10, 1802ல் துவங்கப்பட்டது. மூன்று வெவ்வேறு இடங்களில் தளம் அமைத்தனர்.
- மெட்ராஸ் (சென்னை) புனித தோமையர் மலை மற்றும் பெரும்பாக்கத்திற்கான இடைப்பட்ட தொலைவு
- கேரளாவின் தலச்சேரி மற்றும் கண்ணூருக்கான இடைப்பட்ட தொலைவு
- எழிமலை (Delly) மற்றும் தடியண்டமோளுக்கான இடைப்பட்ட தொலைவு
- இந்தத் தளம் அமைப்பதற்கே நான்கு வருடங்கள் ஆயின. 5 வருடங்களில் அளவீடு செய்ய வேண்டும் என்று நினைத்தது, 60 வருடங்களுக்கும் மேலாக எடுத்துக்கொண்டது.
- சென்னை, புனித தோமையர் மலை (St. Thomas Mount)யிலிருந்துதான், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது.
அருமை ��
ReplyDeleteதேடோடி தேடி கண்டு களித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து களிக்கிறீர்கள் ��
ஆங்கிலத்திலும் பதிவேற்றினால் படிக்கும் குழந்தைகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும்
ReplyDelete