Sunday, February 8, 2015

மீன் தண்ணீர் அருந்துமா?


மீன் தண்ணீர் அருந்துமா?

அது நன்னீர் மீனா அல்லது கடல்நீர் மீனா என்பதைப் பொறுத்தது. மேலும், மீன் தனது உடலில் உள்ள உப்பின் அடர்த்தியை வெளியே உள்ள நீரின் உப்போடு சமநிலை செய்திட தண்ணீர் அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் நிகழ்கின்றது. கடல்நீர் மீன் தண்ணீர் அருந்தும்.
மேலும், அதற்குமுன் சவ்வூடு பரவல் என்றால் என்னவென்று ஒரு சிறு பார்வை பார்த்து விடுவோம்.

செறிவு குறைந்த கரைசல் ஒன்றிலிருந்து செறிவு கூடிய கரைசல் ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (Semi-ermiable Membrane) ஒன்றின் மூலமாக நீர் மூலக்கூறுகள் பரவுவது சவ்வூடு பரவல் என்று சொல்லப்படும்.

பொதுவாக தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சவ்வூடு நெறிப்படுத்தல் (Osmoregulation) முறையைக் கையாளுகின்றன. நீர்வாழ் உயிரினங்களில் மெல்லுடலிகள் அதாவது முதுகெலும்பு இல்லாதவைகள் சவ்வூடு உடன்படுத்திகள் (Osmoconformers) ஆகும். இவைகள் சுற்றுப்புற நீருக்கு ஏற்றவாரு தன் உடற்பொருட்களில் மாற்றத்தினைக் கொண்டிருக்கும்.

பெரும்பாலான முதுகெலும்பு உள்ள நீர்வாழ் உயிரினங்கள் சவ்வூடு நெறிப்படுத்திகள் (Osmoregulators) ஆகும். அதாவது, இவைகள் சூழலுக்குத் தகுந்தவாறு அவ்வப்போது தம்மை சமன் செய்துகொண்டே இருக்கும்.

மீன்களின் தோல் மூலமாக சவ்வூடு பரவல் முறையில் தண்ணீர் அதன் உடலுக்குள் செல்லும். நன்னீர் மீனின் உடலில் உள்ள உப்பானது வெளியே உள்ள தண்ணீரின் உப்பை விட அடர்த்தியானது. எனவே, அதனை வெளிப்புற நீரின் உப்பின் அடர்த்தியோடு சமநிலைப்படுத்த, தனக்குள் வரும் அதிகப்படியான நீர் தன் உடலின் உப்பின் அடர்த்தியைக் குறைத்து விடாமல், அந்நீரைச் சிறுநீராக வெளியேற்றிவிடும். அதற்காக அதன் சிறுநீரகங்கள் சற்று அதிகப்படியான பணியை மேற்கொள்ளும்.

கடல்நீர் மீனின் உடலில் உள்ள உப்பானது வெளியே உள்ள தண்ணீரின் உப்பை விட அடர்த்தி குறைவானது. எனவே வெளிப்புற நீரின் உப்பின் அடர்த்தியோடு சமநிலைப்படுத்த தன் உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறிவிடுவதால், தன் வாய் வழியாகவும் உப்பு நீரை உட்கொள்ளும். அச்சமயம் தன் அந்நீரின் வாயிலாக வரும அதிகப்படியான உப்பை தன் செவுள்களின் மூலமாக வெளியேற்றிவிடும்.

மீன்கள் தண்ணீரில் எப்படி சுவாசிக்கின்றன?

மீன்களும் உயிர்வாழ ஆக்சிஜன் தேவை. தண்ணீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் அமைந்து இருந்தாலும், அதனைப் பிரித்து ஆக்சிஜனை உட்கொள்ள முடியாது. பின் எப்படி அவற்றிற்கு தண்ணீரில் இருந்து ஆக்சிஜன் கிடைக்கின்றது? நீரில் நுண்ணிய காற்றுக்குமிழிகள் கரைந்தே இருக்கும். தண்ணீர் கலக்கப்படும்போதும், நீர்த்தாவரங்கள் மூலமாகவும் அவ்வாறு நீரில் நுண்ணிய காற்றுக்குமிழிகள் கரைந்து கலக்கப்படும். அந்தக் காற்றிலிருந்துதான் ஆக்சிஜனைப் பெற்றுக்கொள்கின்றன.

அதாவது, கடல்நீர் மீன்களின் வாய்வழியே உட்செல்லும் நீரானது சற்றே அழுத்தத்துடன் செவுள்களுக்குள் செலுத்தப்படும். செவுள்களில் இருக்கும் நுண்ணிய துளைகள் வழியாக அந்நீரில் உள்ள ஆக்சிஜன் உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கப்படுகின்றது. மீதமுள்ள நீர் செவுள்களின் வழியே வெளித்தள்ளப்படுகின்றது. நன்னீர் மீன்கள் செவுள்களின் வழியாகவே நீரை உள்வாங்கி சுவாசித்து வெளித்தள்ளுகின்றன.


1 comment:

  1. எத்தனை வகை மீன்கள் இருக்கின்றன?
    அபூர்வமான மீன்கள் உலகத்தின் எந்த பகுதியில் கிடைக்கின்றன இதையும் செர்த்திருக்கலாம் கட்டுரையில்.

    ReplyDelete