Sunday, February 8, 2015

பாறைக்குள் தேரை எப்படி, எப்போது போனது?


Kathiroli Masilamani : பாறைக்குள் தேரை எப்படி, எப்போது போனது?

பதில்: 
யார் பார்த்தது? ஒரு ரெண்டு கதைகளைப் பார்ப்போம்.

கதை 1

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டும்போது நந்தி சிலையை செய்யுறதுக்காக ஒரு பெரிய பாறை தலைமைச் சிற்பியால எடுத்து வரப்பட்டுச்சாம். அப்ப அந்த சிற்பியோட மகன், "அப்பா இந்தப் பாறையிலயா சிலை செய்யப் போறீங்க...? இது தேரை இருக்குற பாறையாச்சே... இதுல சிற்பம் செதுக்குனா... அது விரிசல் விட்டுருமே..."ன்னானாம்.

அந்த சிற்பி, "அடேய்... இது நான் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த பாறை... நீ சின்னப் பயல், உனக்கென்ன தெரியும் பேசாமல் இரு..." என்றாராம். அந்தப் பயலும் விடுவதாயில்லை, "இல்லையப்பா... இதில் சிற்பம் செதுக்காதீர்கள்... அது உங்களுக்கு இழிவையே தேடித்தரும்" என்றானாம்.

சிற்பியும், "சரி, எதை வைத்துச் சொல்கிறாய்?" எனக் கேட்க, அவனும், "பாறை சூடாகாமல் குளிர்விக்க நீங்கள் அப்பாறையின் மேல் நீரை ஊற்றி வந்தீர்கள் அல்லவா? மற்ற எல்லா இடங்களிலும் ஈரம் சீக்கிரம் காய்ந்து விட்டது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஈரம் காய்வதற்கு நேரம் எடுக்கின்றது. அதை வைத்துதான் சொன்னேன்." என்றானாம்.

அவரும், "அப்படியா... எங்கே அந்த இடத்தைச் சுத்தியால் தட்டுங்கள்..." எனச் சொல்ல, ஒருவர் சிறு சுத்தியை எடுத்து அந்த இடத்தில் தட்ட, பாறைச்சில்லுத் தெரித்து அதிலிருந்து ஒரு தேரை துள்ளிக்குதித்து ஓடியதாம்.


கதை 2.
ஒரு சமயம் பரமார்த்த குரு நடக்கச் சிரமப்படுகிறார் என்று சீடர்களுக்கு ஒரே கவலை. அப்பொழுது அந்தப்பக்கமாக ஒருவன் ஒரு குதிரை மீது வர, அவனிடம் அந்தக் குதிரையை விலை பேசி வாங்கிவிடலாம் என்று விலை கேட்க, அவனோ நூறு பொன்கள் என்று சொல்ல, இவர்கள் தங்களிடமிருந்த காசுகளை எண்ணிப்பார்த்தால், 13 பொன்களுக்கு மேல் இல்லை.

எங்களிடம் 13 பொன்கள்தான் இருக்கின்றன... எனச் சொல்ல... அதுக்கு நீங்க குதிரை முட்டைதான் வாங்க முடியும்னு அவன் கேலி பேசிட்டுப் போயிட்டான். இவங்களுக்கும் அது நல்ல ஐடியாவா தெரிஞ்சது. புதுசா ஒரு குதிரைய வாங்கிப் பழக்குறதுக்குப் பதிலா... நாம ஏன் ஒரு குதிரை முட்டை வாங்கி, அதைக் குதிரைக்குஞ்சா பொறிக்க வச்சு, அதை வளர்த்து, குருவோட பழகவிடக்கூடாதுன்னு யோசிச்சாங்களாம்.

சரின்னு... குதிரை முட்டை வாங்கக் கிளம்பிட்டாங்களாம். எல்லோரையும் கேட்டுப் பாக்க, அத்தனை பேரும் சிரிக்கிறாங்களே தவிர... எதுவுமே சொல்லலையாம். அந்த ஊருல ஒரு ஏமாத்துக்காரன் இருந்தானாம். அவன் இவங்களைப் பாத்ததும்... வாங்க, நான் உங்களுக்கு குதிரை முட்டை தர்றேன்... ஆனா, ஒரு முட்டை பத்து பொன்கள்னு சொல்ல, இவங்களும் ஓகேன்னு சொல்லி பத்து பொன்னைக் கொடுத்தாங்க.

அவன் இவங்களை ஒரு பூசணித் தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போயி, நல்ல பெரிய பூசணிக்காய் ஒன்னைப் பறிச்சுக் கொடுத்து, இதான் குதிரை முட்டை... எடுத்துட்டுப் போங்கன்னு அனுப்பிட்டானாம். இவங்க வர்ற வழியில, யாரு அதைத் தூக்கிட்டு வர்றதுன்னு ஒரே சண்டை. நீ பிடி, நான் பிடின்னு அதைக் கீழ போட்டுட்டாங்களாம்.

கீழ விழுந்த பூசணிக்காய் டமால்னு உடைஞ்சு போச்சாம். அப்ப பக்கத்துப் புதர்ல இருந்த ஒரு முயல் இந்தச் சத்தத்தைக் கேட்டதும்... பயந்து போயி குதிச்சு ஓட ஆரம்பிச்சுச்சாம். அடேய்... குதிரை முட்டை உடைஞ்சு குதிரைக் குஞ்சு குதிச்சு ஓடுதுறா.... அதைப் பிடிங்கடான்னு தலைமைச் சீடன் கத்த...

எல்லாப் பயலுகளும், அந்த முயலைத் துரத்திகிட்டு ஓர ஆரம்பிச்சுப் பிடிக்க முடியாம களைச்சுப் போயி திரும்பி வந்துட்டாங்களாம்.

இப்ப ரெண்டு கதையையும் ரிலேட் பண்ணிப் பார்க்கலாமா? முதல் கதைக்கு ஆதாரம் ஏதும் இல்லை. அப்டீயே அந்தப் பாறைச் சில்லைத் தட்டும்போது சில்லு கீழ விழுந்ததுல பக்கத்துல இருந்து ஏதாச்சும் ஒரு தவளை பரமார்த்த குரு கதையில ஓடுன குதிரைக் குஞ்சு மாதிரி தாவி ஓடிருக்கலாம்... அதை வச்சு பாறைக்குள்ள தேரைன்னு கதை கட்டியிருக்கலாம்.

சிற்பம் செய்யுறதுக்கு நல்ல கெட்டியான இறுகுன பாறைதான் வேணும். பாறைகளுக்குள்ளே துளைகளோ, வெற்றிடமோ, அல்லது காற்றுப்பை போன்ற அமைப்போ இருந்தால் அது சிற்பம் செய்யுறதுக்கு ஏற்றது அல்ல. ஏன்னா, அது எப்ப வேணாலும் உடைஞ்சு சிதறிபோயிடும். அதுனால, பாறையைத் தேர்ந்தெடுக்குறதுக்கு முன்னாடி அதைத் தட்டிப் பார்ப்பாங்க... அதுல வர்ற சத்தத்தை வச்சே... அது நல்ல பாறையா, தேறாத பாறையான்னு முடிவு பண்ணிருவாங்க.

தேறாத பாறைங்குறதைத்தான் நம்மாளுங்க தேறை விழுந்த பாறைன்னு உடான்ஸ் அடிக்கிறாங்க போல.


இனி அறிவியல் விளக்கம் என்னன்னு பார்ப்போமா...?

கல்லுக்குள் தேரை என்பது பிரிட்டானிய மாத சஞ்சிகையான Fortean Timesன் படி, கிட்டத்தட்ட பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இன்று வரையில் உலகம் பூராவற்றிலும் இருந்து சுமார் 210 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், எதுவும் அறிவியலாலர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெரிய பெரிய புவியமைப்பு ஆய்வாளர்கள் உலகம் பூராவும் பாறைகளையும் படிமங்களையும் வெட்டி ஆராய்ந்து வருகின்றார்கள். அவர்கள் ஒருவருக்கேனும் இது போன்ற சம்பவம் நிகழவில்லை. ஆனால், படிப்பறிவற்ற சாதாரண கல்லுடைக்கும் தொழிலாளிகளுக்கே இது போன்ற சம்பவங்கள் தோன்றுகின்றன.

சரி, தவளைகள் மற்றும் தேரைகளால் அது போன்று உயிர் பிழைத்திருக்க முடியுமா? சில உயிரினங்கள் இருக்கின்றன. அவைகள் நீளுறக்கத்தில் (Dormancy) ஆழ்வன. இயற்கைச்சூழல் மாறுபாட்டால் அவைகள் தங்கள் உடல் இயக்கங்கள், வளர்ச்சி, செயல்பாடுகள் ஆகியவற்றைத் தற்காலிகமாகக் குறைத்துக்கொண்டு உறக்கநிலைக்குச் சென்றுவிடும். இந்த நீள் உறக்கம் நான்கு வகையாகப் பிரிக்கின்றனர்.

1. Hibernation
2. Diapause
3. Aestivation (எஸ்டிவேஷன்)
4. Brumation

1. Hibernation
குளிர்காலத்தில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடுகளாலும், அதிகக் குளிரில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் முன்னேற்பாடாக குளிர்கால உறக்கத்திற்குச் சில பாலூட்டிகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும். வெப்பகாலங்களில் அதிக உணவை உட்கொண்டு அவற்றை கொழுப்பாக உடலில் சேர்த்துக்கொண்டு, குளிர்காலத்தில் பாதுகாப்பான ஓரிடத்தில் போய், தங்களது இதயத்துடிப்பு, உடல்வெப்பநிலை, இயக்கச் செயல்பாடுகள் எல்லாவற்றையும் குறைத்துக்கொண்டு உறங்கத் துவங்கிவிடும். பார்ப்பதற்கு இறந்துவிட்டதைப் போன்று தோன்றினாலும், அவற்றில் வளர்சிதை மாற்றங்கள் மிக மெதுவாக நடந்துகொண்டுதான் இருக்கும்.

2. Diapause
பூச்சிவகைகளின் முன்கூட்டித் தீர்மானிக்கப்படும் வளர்சிதைகுறைவுநிலை இது. இலையுதிர் காலத்திற்கும் இளவேனிற்காலத்திற்கும் இடையே இது நிகழும். Roe Deer எனப்படும் பாலூட்டி மானினத்தின் கருப்பையில் கருமுட்டை சென்று சினைப்பிடிப்பது கூட தடுக்கப்பட்டு, உரிய காலம் பார்த்து அனுமதிக்கப்படும்.

3. Aestivation
இது சில முதுகெலும்பிலிகளின் (invertebrates) சூழலைப்பொறுத்து அமையும் ஒரு நிலை. குறிப்பாக வறண்ட வெப்பமான காலங்களில். தோட்டத்து நத்தை மற்றும் சில புழுக்கள், அபூர்வமாக வேறு சில உயிரினங்கள், நுரையீரல் மீன் (Lung Fish) போன்றவற்றிற்கும் இது நிகழும்.

4. Brumation
இது ஊர்வன விலங்கினங்களில் நிகழும். குளிர்கால உறக்கம் போன்றதே ஆயினும், இவைகள் இடையில் நீர் அருந்துவதற்காக உறக்கத்தில் இருந்து விழிக்கும்.

ஆனால், எத்தனை காலம் இப்படி உணவு நீர் இன்றி நீள் உறங்குநிலையில் இவைகள் இருக்கும் என்றால், 8 முதல் 12 மாதங்கள் வரைதான். அதற்கு மேலும் தொடர அவற்றின் இயல்புநிலை இடம் கொடுக்காது. இயற்கையும் அனுமதிக்காது. மீறப்பட்டால் அவைகள் இறந்துபடும்.

கோடைகாலங்களில், நீர்நிலைகள் வற்றிப்போகும்பொழுது சில மீன்கள், மற்றும் தவளைகள் இவ்வாறே கோடைகால உறக்கநிலைக்குச் சென்று உயிர் பிழைத்திருக்கும். அச்சமயங்களில் தன் உடலின் நீரிழப்பைத் தடுக்க தன்னுடலைச் சுற்றி ஒரு கூடுபோன்று உருவாக்கிக்கொள்ளும். மூச்சு மட்டும் விட்டுக்கொண்டிருக்கும். மீண்டும் அடுத்த பருவத்தில் மழை பெய்து நீர்நிலை நிரம்புகையில் இவைகள் உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு விடும்.

மேலும், பாறைகள் எல்லாம் ஒரு வருடகாலத்தில் எல்லாம் உருவாகி விடாது. அதிஉயர் வெப்பநிலையும் பன்னெடுங்காலங்களும் பாறை உருவாகிட தேவைப்படும்.டு அதற்குள் ஒரு தவளையோ தேரையோ போய் இருந்து உறங்கும் என்பதெல்லாம் சாத்தியமில்லை. இல்லை அவற்றின் முட்டைகள்தான் அதற்குள் இருக்கும் பிற்பாடு அவை பொரிந்து அதற்குள் வளரும் என்பதும் சாத்தியமில்லை. குஞ்சு வளர்வதற்கு போதிய உணவும் காற்றும் வேண்டும்.

ஆக, எப்படிப் பார்த்தாலும், பாறைக்குள் தேரை அறிவியல்படி சாத்தியமே இல்லை. பரமார்த்த குரு கதைதான்

5 comments:

  1. நன்றாக எழுதுகின்றீர்கள். விளக்கம் அருமை ...நன்றி..

    ReplyDelete
  2. அருமை ஆனால் பாறைகள் உடைக்கும் போது நடுவில் குழி உள்ளதே நான் பார்த்துள்ளான் எப்படி

    ReplyDelete
  3. அருமையான கதைகளோடு விளக்கம்... நன்றி 🙏💐

    ReplyDelete
  4. எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. எப்படி பாறைக்குள் தேரை இருக்குமென. நல்ல விளக்கம்

    ReplyDelete