Sunday, February 8, 2015

பாம்பு


பாம்பு

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும், பலருக்குத் தொடையும் நடுங்கும். காரணம் அதைப்பற்றிய அறியாமை அல்லது தவறான தகவல்கள். உண்மையில் விஷத்தன்மையுள்ள பாம்புகள் கடலில்தான் அதிகம். தரையில் இருக்கும் பாம்புகளிலும் பெரும்பாலும் விஷத்தன்மையற்றவைதான். அப்படியே விஷத்தன்மை உள்ள பாம்புகள் என்றாலும் அவைகள் தற்காத்துக்கொள்வதை விட தங்கள் உணவுகளை கொல்வதற்காகவே விஷத்தைப் பயன்படுத்தும். விஷமற்ற பாம்புகள் தங்கள் இரைகளை சுற்றி வளைத்து இறுக்கிக் கொன்று (Constriction) பின்னர் உண்ணும். தானே இறந்து கிடக்கும் பிராணிகளை உண்ணாது. அனைத்துப் பிராணிகளும் ஊனுண்ணிகள்.

பாம்புகள் ஊர்வன வகையைச் சார்ந்தது. ஏறத்தாழ 2700க்கும் அதிகமான வகைகள் உண்டு. பாம்புகளுக்குக் கால்கள் இல்லை. வெளிக்காதுகளும் இல்லை. தங்கள் இரையை வாசனையை வைத்தே அறிகின்றன. வாசனையையும் தங்கள் பிளவுபட்ட நாக்கினால் உணர்கின்றன. பாம்புகளின் பார்வை ஒன்றும் அத்துனை துல்லியமில்லை என்றாலும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் அவற்றால் வித்தியாசம் காண முடியும். அசைவுகளையும் உணரமுடியும். சில பாம்புகளால் மனிதர்களைப் போன்றே இரு கண்களாலும் ஒரே பொருளைக் காண முடியும்.

பாம்புகளுக்கு வெளிக்காதுகள் இல்லாத காரணத்தினால், அதிர்வுகளை தன் தாடைகள் மூலமாக அறிகின்றன. கீழ்த்தாடையின் இடது வலது பக்கங்கள் நீட்சியுள்ள ஜவ்வினால் இணைக்கப்பட்டிருப்பதால், பெரிய விலங்குகளைக் கூட அவற்றால் விழுங்க முடியும்.

பாம்புகளின் தோலானது செதில்கள் அமைப்பைக் கொண்டது. இது அவற்றின் உடல் வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ளவும், உருவை மறைத்துக்கொள்ளவும் (Camouflage) தரையில் ஊர்ந்து செல்லவும் பயன்படுகின்றது.

பாம்பு தன் தோலுரிப்பது (Moulting) அதற்குப் பல நன்மைகளைத் தருகின்றது. நன்கு வளர்ந்த பாம்பு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையும், வளரும் இளம் பாம்பு வருடத்திற்கு நான்கு முறைகளும் தோலுரிக்கும். 

நன்மைகள் என்னவென்றால், முதலில் பழைய தோல் போய் பளபளப்பான ஆரோக்கியமான புதிய தோல் கிடைக்கின்றது. இரண்டாவது, தன் மேல் ஒட்டி வாழும் ஒட்டுண்ணிகளை நீக்கும் வாய்ப்பு அமைகின்றது. 

பாம்பு தோலுரிக்கும் முன் உணவு உண்பதில்லை. மறைவான பாதுகாப்பான இடம் தேடிச் சென்று விடும். அச்சமயத்தில் தோல் வறண்டும் மங்கியும் காணப்படும். கண்பார்வை மங்கியும் காணப்படும். பின்னர் தோலின் உட்புறம் நீர்க்கசிவை உண்டாக்கும். பின்னர் மூக்கின் நுனியை சொரசொரப்பான எதிலாவது தேய்த்துக் கிழித்து அத்தோலை கூரிய எதிலாவது மாட்டச் செய்து, நகர்ந்து நகர்ந்து நாம் காலுறையைக் கழற்றுவது போல் தோலை உரித்து விடும். 

இப்படி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதாலேயே அது மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அஸ்லெப்பியசின் தடி என்ற அடையாளத்தில் பாம்பின் படம் இடம் பெற்றிருக்கும்.

பாம்புகளின் பற்கள் அடிக்கடி புதுப்பித்துக்கொள்ளப்படும் (Polyphyodont) வகையைச் சார்ந்தது. 

பொதுவாகப் பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். விரியன் போன்ற சில பாம்புகள் குட்டி போடும். 

பாம்பு விஷம் நம் இரத்தத்தை உறைய வைக்கும் என்பதால் மூளைக்குச் செல்லும் இரத்தம் குறைவுபட்டு மரணம் நிகழ்கின்றது. அது தவிர சில வகைகள் நரம்பு மண்டலங்களையும் பாதிக்கும். பாம்பு விஷத்தால் இறப்பதை விட பயத்தால் இறப்பவர்களே அதிகம். பாம்பு கடித்தவுடன் பதட்டப்பட்டு இரத்த ஓட்டைத்தை அதிகரிக்கக்கூடாது.

சில உண்மைகள்

  • சாரைப்பாம்புக்கு விஷம் கிடையாது.
  • சாரைப்பாம்பும் நல்லபாம்பும் இணைசேராது.
  • பாம்பு பால் குடிக்காது.
  • பாம்பு தாக்கியவரை நினைவில் வைத்து பழிவாங்கும் என்பது தவறு.
  • பாம்பு மாணிக்கக் கல்லைக் கக்கி அதன் ஒளியில் இரை தேடும் என்பது அபத்தம்.

இதில் இன்னும் திருத்தம் மேற்கொள்ளப்படும்....

No comments:

Post a Comment