Sunday, February 8, 2015

வெப்ப இரத்தப் பிராணிகள், குளிர் இரத்தப் பிராணிகள்



வெப்ப இரத்தப் பிராணிகள், குளிர் இரத்தப் பிராணிகள் என்றால் என்ன?

தன் உடலின் வெப்பநிலையை தானே சீராக கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் பிராணிகள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படும். அதாவது, சுற்றுப்புறத்தின் வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது தன்னைக் குளிச்சியாக வைத்துக்கொள்ளவும், சுற்றுப்புறத்தின் வெப்பநிலை குளிர்நிலைக்கு வரும்பொழுது தன் உடலின் வெப்பநிலையை உயர்த்தி கதகதப்பாக வைத்துக்கொள்ளவும் இவைகளால் இயலும். பாலூட்டிகள், பறவைகள் இந்த வகையைச் சாரும். (சில விதிவிலக்குகளும் உண்டு) 

சுற்றுப்புறத்தின் வெப்பநிலையை உள்வாங்கித் அதற்கேற்ப தன் உடலின் வெப்பநிலையை மாற்றிக் கொள்ளும் பிராணிகள் குளிர் இரத்தப் பிராணிகள் எனப்படும். அதாவது, சுற்றுப்புறம் வெப்பமாக இருந்தால் இவைகளின் உடலும் வெப்பமாக இருக்கும். குளிராக இருந்தால் இவைகளும் குளிராக இருக்கும். ஊர்வன, மீன்கள், பூச்சிகள், இருவாழ்உயிரிள் மற்றும் எண்கால் பூச்சிகள் (Arachnida) இந்த வகையைச் சாரும். (சில விதிவிலக்குகளும் உண்டு)

வெப்ப இரத்தப் பிராணிகள் (Warm Blooded) மற்றும் குளிர் இரத்தப் பிராணிகள் (Cold Blodded) என்று சொல்வதை அப்படியே நேரடிப்பொருள் கொண்டால் அது சரியாக இருக்காது. ஏனெனில், குளிர் இரத்தப் பிராணிகளுக்கு இரத்தம் குளிராக இருப்பதில்லை. அவைகளுக்கான தொழில்நுட்பப் பெயர்கள் இவ்வாறு அமையும்.

வெப்ப இரத்தப் பிராணிகள் = Endothermic / Homeothermic
குளிர் இரத்தப் பிராணிகள் = Ectothermic / Poikilothermic


விதிவிலக்குகள்

பெரும்பாலான பாலூட்டிகள் பறவைகள் அனைத்தும் வெப்ப இரத்தப் பிராணிகள் என்றாலும், வவ்வால்கள், அகழெலிகள் (Moles) போன்றவைகளின் உடல்வெப்பநிலை சுற்றுப்புறத்திற்கேற்ப மாறும் தன்மை கொண்டவை குறிப்பாக அவைகள் செயலற்று இருக்கும்பொழுது.

அதே போன்று சில பூச்சிகள், தேனீக்கள், பருந்துஅந்துப்பூச்சிகள் (Hawk Moths) தங்கள் சிறகசைப்பின் மூலம் தசைநார்களை அசைத்து தங்கள் உடல் வெப்பநிலையை அதிகரித்துக்கொள்ளும்.

தேனீக்கள் நெருக்கமான குழுக்களாகச் சேர்ந்து சிறகசைக்கும். சில மீன்களுக்கு இயல்பாகவே வளர்சிதை செயல்பாடுகளால் தன் மூளை மற்றும் கண்கள் குளிரில் உறைந்து விடாமல் காத்துக்கொள்ளும் அமைப்பு உள்ளது. ஏனெனில் மூளை மற்றும் கண்களின் பயன்பாடுகள் அவைகளுக்கு அவசியமாகின்றது.


எப்படி நிர்வகிக்கின்றன?

வெப்ப இரத்தப் பிராணிகள் தங்கள் உடல் வெப்பநிலையை உருவாக்கிட, பல்வேறு வழிகளைக் கையாண்டாலும், பெரும்பாலான வெப்பம் உணவைச் சிதைத்தே பெறுகின்றன. அவைகள் உண்ணும் உணவில் 60 சதவீதத்திற்கும் மேல் வெப்பநிலையை உருவாக்கவும் நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ளவையே உடலின் பொருண்மைக்குப் பயன்படுகின்றன. அதனாலேயே இவைகள் அதிகளவு உணவு உண்ணுபவைகளாக இருக்கின்றன.

மேலும், இவைகள் ஒரு நிழலான இடம் அல்லது காற்று வீசும் இடத்திற்கு இடம் பெயர்ந்தோ, தன் மீது தண்ணீர் ஊற்றிக்கொண்டோ தன் வெப்பநிலையைச் சமன் செய்து கொண்டாலும், உட்செயல்பாடாக, வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாயும் தன் உடல் வெப்பநிலையை இழக்கச் செய்யும். பாலூட்டிகளுக்கு மட்டுமே வியர்க்கும். மனிதர்கள் குரங்குகளுக்கு உடல் முழுவதும் வியர்வைச் சுரப்பிகள் உண்டு. பூனை மற்றும் நாய்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் பாதத்தில் உண்டு. திமிங்கலங்கள் பாலூட்டிகள் என்றாலும் அவைகள் தண்ணீரிலேயே இருப்பதால் அவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை.

பெருத்த உடலுடைய பாலூட்டிகள் தங்கள் உடல் அதிகச் சூடாகிவிட்டால் குளிவிக்கச் சற்றுச் சிரமப்படும். அதனாலேயே யானைகளுக்கு பரந்துவிரிந்த அதே சமயம் மெல்லிய காதுகள். அதன் மூலம் தங்கள் உடல் வெப்பநிலையை அவைகள் இழக்கும். போதாதற்கு... காதை விசிறி போல் வீசி வெப்பத்தை காற்றில் விரயமாக்கும்.

பாலுட்டிகளுக்குப் பெரும்பாலும் உடல் மயிர் நிறைந்திருக்கும். பறவைகளுக்கு சிறகுககள். எல்லாம் வெப்பத்தினை தக்க வைத்துக்கொள்ளவே. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு அடர்ந்த சிறு முடிகள் (fur) இருக்கும். அவைகள் எல்லாம் குளிர்காலத்தில் வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ளவே. கோடைக்காலத்தில் முடிகளை உதிர்ந்தும், குளிர்காலத்தில் முடிகள் அடர்ந்து வளர்ந்தும் காணப்படும். தன் உடலை நடுக்குவதன் மூலம் தசைகளை உராயச் செய்தும் உடலில் வெப்பநிலையை உருவாக்கிக்கொள்ளும்.


குளிர் இரத்தப் பிராணிகள் சுற்றுப்புறத்தின் வெப்பநிலையை உள்வாங்கிக்கொண்டு தங்கள் உடலின் வெப்பநிலையை அமைத்துக்கொள்கின்றன. வெப்பமான சூழலில் இவைகள் இரத்தம், வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்தை விட அதிக சூடாக இருக்கும். இவைகள் வெப்பமான சூழலில் அதி சுறுசுறுப்பாக இருக்கும். குளிரான சூழலில் மிக மந்தமாக இருக்கும். உணவின் பெரும்பகுதி இவைகளுக்கு உடலில் சேர்ந்து விடும். இவைகள் வெப்ப இரத்தப் பிராணிகளோடு ஒப்பிடுகையில் குறைவான உணவையே உட்கொள்ளும்.

பாம்புகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடுவதில்லை. காரணம் அவைகளுக்கு வேட்டையாட தன் தசைகள் ஒத்துழைக்க வெப்பம் வேண்டும். நிழலான இருப்பிடத்தை விட்டு வெளியில் வந்ததும் உடனேயேயும் அவைகளால் வேட்டையாட முடியாது. சற்று வெயில் காய்ந்து அதன் பின்னர்தான் தேடிப்போய் வேட்டையாடும். காரணம், அவைகளின் தசை இயக்கம் வெப்பத்தில் இளகியும், குளிரில் கடினமாயும் மாறும் ஒரு வேதியல் வினையைப் பொறுத்தது.

குளிர் இரத்தப்பிராணிகள் சூரிய வெப்பத்தில் குளிர்காய்வதைப் பார்த்திருப்பீர்கள். சூரிய ஒளிக்கு செங்குத்தாகப் படுத்துக்கொண்டு, தன் விலா எலும்புகளை விரித்தும், கால்களை விரித்தும் தன் உடலின் பரப்பளவை அதிகரித்துக்கொண்டு சூரிய வெப்பம் தன் மீது அதிகளவில் படுமாறு குளிர் காயும். உடலின் வண்ணத்தையும் அடர்த்தியாக மாற்றிக்கொள்ளும். அப்பொழுதுதான் வெப்பத்தை வெளிவிடாமல் செய்ய முடியும்.

உடல் வெப்பம் அதிகமாகிப் போய்விட்டால், சூரிய ஒளிக்கு இணையாகப் படுத்துக்கொண்டோ அல்லது நிழலான இடம் தேடிப் போயோ, வாயை அகலத் திறந்து கொண்டும், உடலின் வண்ணத்தை மெலிதாக மாற்றிக்கொண்டும் அல்லது, குளிரான மணலுக்குள் குழிதோண்டிப் புதைந்து கொண்டும் தன் உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும். மீன்கள் குளிர்காலத்தில், நீரின் ஆழத்திற்கும், அல்லது கதகதப்பான நீரிருக்கும் இடத்திற்கும் இடம் பெயர்ந்து விடும். சில மீன்களுக்கு குளிரில் உறைந்து போய்விடாதவாறு உடலில் சிறப்புப் புரதம் (Anti-freeze Protein) இருக்கும். 

பாம்புகள், பல்லிகள், தேரைகள், தவளைகள், சாலமண்டர்கள் (Salamanders) மற்றும் பெரும்பாலான ஆமைகள் குளிர்காலத்தில் குளிர்காலஉறக்கத்திற்குச் சென்று விடும். குளிர் தாங்காது, பல பூச்சியினங்கள் இறந்து விடும் அல்லது கதகதப்பான இடம் தேடிச் சென்றுவிடும் அல்லது மண்தோண்டி அடியில் சென்று விடும்.


சாதகங்களும் பாதகங்களும்

  • வெப்ப இரத்தப் பிராணியாக இருப்பதில் பல வசதிகள் உள்ளன. 
  • இவைகளால் குளிரான சூழலிலும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். 
  • புவியின் பெரும்பாலான இடங்களில் இவைகளால் உயிர்வாழ முடியும். ஆர்க்டிக், மலை உச்சி என்பதாயிருந்தாலும் சரி.
  • இவைகளால், புவியின் பல்வேறு சூழல்களிலும், சுறுசுறுப்பாக இயங்கவும், உணவு தேடவும், தற்காத்துக்கொள்ள சண்டையிடவும், இணையோடு இணைந்து இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.

  • குளிர் இரத்தப் பிராணிகளால் குளிரான சூழலில் கடினப்பட்டே அசைய முடியும். 
  • புவியின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உயிர்வாழ முடியும்.
  • இவைகளால் கதகதப்பான சூழல் இருந்தால் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கவும், உணவு தேடவும், தற்காத்துக்கொள்ள சண்டையிடவும், இணையோடு இணைந்து இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.


குளிர் இரத்தப் பிராணியாக இருப்பதிலும் சில வசதிகள் உண்டு. வெப்ப இரத்தப் பிராணியை விட உயிர்வாழ குறைந்த அளவு சக்தியே போதுமானது. ஒரே உடலளவு உள்ள குளிர் இரத்தப் பிராணியை விட வெப்ப இரத்தப் பிராணி அதிக அளவு உட்கொள்ள வேண்டிவரும். ஏனெனில், உடல் வெப்பத்தினை உருவாக்க அதிகளவு உணவு தேவைப்படும்.

வெப்ப இரத்தப் பிராணியாக இருப்பதில் ஒரு குறைபாடு என்னவென்றால், கதகதப்பாய் உடலை வைத்திருப்பதால், பெரும்பாலான நச்சுக்கிருமிகளுக்கும், நுண்ணுயிரிகளுக்கும், ஒட்டுயிரிகளுக்கும் வாழ்வதற்கு வசதியாகப் போய் விடுகின்றது. ஊர்வனவற்றை விட, பாலூட்டிகளும், பறவைகளும் இதனால் அதிகளவில் பாதிப்படைகின்றன. ஆனாலும், அதிலும் அவைகளுக்கு அதிகளவில் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்து காப்பாற்றிவிடுகின்றது. ஊர்வனவற்றிற்கான நோயெதிர்ப்பு சக்தி வெப்பமான சூழலில் நன்கு செயல்படும். எனினும், நோய்த்தாக்குதல் சமயங்களில் அவைகள் தங்கள் உடல் வெப்பநிலையை குறைத்துக்கொண்டு அக்கிருமிகள் மேலும் வளரவிடாது தடுத்துக்கொள்கின்றன.

No comments:

Post a Comment