Sunday, January 18, 2015

தீ மிதித்தல்


பூக்குழி இறங்குதல் (அ) தீ மிதித்தல்

பூக்குழி இறங்குதல் என்று பரவசத்தோடு சொல்லப்படும் நெருப்பில் இறங்கி நடப்பது அதிசயமா, அற்புதச்செயலா? இதற்கான அறிவியல் விளக்கம் என்னவென்று தெரிந்துகொண்டால், வியப்பதற்கு ஏதுமில்லை என்பது தெளிவாகும்.

முதலில் நெருப்புக்குண்டம் அமைப்பது மரக்கட்டைகள் அல்லது நிலக்கரிகளால்தான். அவைகள் நெருப்பு மூட்டப்பட்டு எரிந்த நிலையில் பார்த்தோமானால் அவற்றைச் சுற்றி சாம்பல் பூத்துவிடும். அந்தச் சாம்பல் அதன் கீழே இருக்கும் நெருப்பிற்கும் நம் காலுக்கும் இடையே ஒரு insulator போன்று செயல்பட்டு அதன் கீழே இருக்கும் வெப்பத்தினை நம் தோலுக்குக் கடத்தப்படுவதைத் தாமதிக்கச் செய்யும்.

இரண்டாவது, நிலக்கரிகள் என்பது பெரும்பாலான கார்பன் அணுக்களாலும், காற்றறைகளாலும் அமைந்ததாக இருக்கும். அப்படி இலகு எடை கொண்ட கார்பன் அமைப்பானது வெப்பத்தினை எளிதில் கடத்தாது. அதுவல்லாமல் ஒரு இரும்புப் பாளத்தை அடியில் நெருப்பு வைத்து சூடாக்கி அதன் மேல் நடந்தால், அவ்வளவுதான், தோல் பொசுங்கி, சதை பொசுங்கி நமக்கு மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்படும். காரணம் இரும்புப்பாளத்தின் வெப்பம் எந்தவித தடையும் இன்றி எளிதில் நம் காலுக்குத் தொடர்ந்து கடத்தப்படும். விளைவு... தீக்காயம்.

மூன்றாவது, நெருப்பில் நடப்பவர் மெதுவாக நடப்பதில்லை, நெருப்பின் மேல் நீண்ட நேரம் நிற்பதும் இல்லை. நெருப்புக் கங்குகளில் இருந்து வெப்பம் நம் கால் தோலுக்குக் கடத்தப்படுவது மெதுவாகவே நிகழும் என்றாலும், வெப்பம் நிச்சயம் கடத்தப்படத்தான் செய்யும். நாம் நீண்ட நேரம் அதில் நிற்போமானால் நிச்சயம் நமக்குத் தீக்காயம் ஏற்படும். ஆக, விறுவிறுவென்று நடந்து விட்டோமானால் நெருப்பின் வெப்பம் நம் காலைச் சுடாது.

அது போகவும், இயற்கையாக நம் காலில் வெளிப்படும் வியர்வை மிகச்சிறிய அளவில் வெப்பத்தினைக் குறைக்கப் பயன்படும். நம் ஊரில் நெருப்பில் இறங்கி நடப்பவர் உடல் முழுக்கத் தண்ணீரை ஊற்றிக்கொள்வர். அல்லது பாதங்களில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு நடப்பர். இதுவும் வெப்பத்தினைக் குறைக்கும் ஒரு முயற்சியே.

மேலும், முதல் 10 பேர்கள் நடந்து சென்றுவிட்டால் அந்த இடத்தில் இருந்த நெருப்பு அணைந்துவிட்டிருக்கும். அதன் மேல்தான் அடுத்த 10 பேர்கள் நடந்து செல்வார்கள். அவர்களுக்கு சுடவே சுடாது. அதன்பின்னர்தான் அந்தவிடத்தில் அருகே உள்ள நெருப்பை வாரிப் போடுவார்கள்.

ஆக, நெருப்பில் நடக்கும்பொழுது நமக்குச் சுடாமல் இருக்க மூன்று காரணிகள் இருக்கின்றன.

1. வெப்பம் அரிதிற்கடத்தப்படுவது
2. வெப்பத்தடை
3. நெருப்பிற்கும் காலிற்கும் இடையேயான குறுகிய காலத் தொடர்பு

மனவுறுதி கொண்ட யார் வேண்டுமானாலும் அப்படி நெருப்பில் நடக்கலாம். சிலருக்கு சிறுசிறு தீக்காயங்களும் ஏற்படலாம். இதில் அதிசயம் ஏதும் இல்லை. மாறாக அறிவியலே உள்ளது.

1 comment: