Monday, January 19, 2015

வலி


வலி என்பது தோல்களிலால் உணரப்படுவதா? அல்லது நரம்புகளால் உணரப்படுவதா? தீக்காயங்களினால் முழுவதுமாக தோல்களை இழந்த ஒருவனால் வலிகளை உணரமுடியாது என்று சொல்கிறார்கள் அது உண்மைதானா? 

பல்வேறு மருத்துவம் சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதால் பலவற்றை அப்படியே ஆங்கிலத்திலேயே பயன்படுத்துகின்றேன். பிற்பாடு தமிழ்ப்படுத்த முயற்சி செய்வோம்.

Nociceptor, noci என்றால் இலத்தீன் மொழியில் காயம்பட்ட அல்லது புண்பட்ட (hurt) என்று பொருள். அதனால் நாம் தமிழில் வலியுணரி என்றழைக்கலாமா? அவைகள் நம் தோலின் புறஅடுக்கான Epidermis தாண்டி உள்ள Dermis அடுக்கு வரையில் உடலெங்கும், ஏன் உள்ளுறுப்புகளிலும் கூட கற்றை கற்றையாகப் பரவி இருக்கின்றன. மூட்டுகள், தசைகள் மற்றும் தசைநார்களிலும் இவை இருக்கும். இவையே நாம் வலி உணர்வதற்கான முதல் வாசல்.

ஒவ்வொரு விதமான வலிகளுக்கும், தன்னைச் சுற்றியுள்ள உடல் திசுக்களின் வெப்ப மாறுபாடுகளுக்கும், அழுத்தங்கள், நீட்சிகள் மற்றும் அசைவுகளுக்கும் தனித்தனி nociceptorகள் செயல்படும். இழைகளாகப் பரந்து இருக்கும்.

இவைகள் நரம்பு மண்டலத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். நம் நரம்பு மண்டலம் என்பது இரு முக்கிய அமைப்புகளைக் கொண்டது. மூளை (brain) மற்றும் தண்டுவடத்தை (spinal cord) உள்ளடக்கிய மைய நரம்பு மண்டலம் (central nervous system). மற்றொன்று உணர் (sensory) மற்றும் இயக்க (motor) நரம்புகளைக் கொண்ட புறநரம்புமண்டலம் (peripheral nervous system).

உணர் நரம்புகள் தான் உணரும் மாறுபாடுகளை தண்டுவடத்தின் வழியாக மூளைக்குக் கடத்தும். மூளை திரும்பக் கொடுக்கும் கட்டளைகளை ஏற்று அதற்கேற்றவாறு இயக்க நரம்புகள் செயல்பட்டு நம்மை அசைய வைக்கும்.

ஒவ்வொரு உணர் நரம்புகளும் வெவ்வேறு இழைகள் வாயிலாக பல்வேறு விளைவுகளை உணர்ந்து வேதியற்செய்திகளாகத் தண்டுவடத்திற்குக் கடத்தும். தண்டுவடம் என்பது எந்நேரத்திலும மூளையிலிருந்தும் மூளைக்கும் செய்திகளைக் கடத்தும் நரம்புத் தொகுப்புகளைக் கொண்ட ஒரு சிக்கலான அமைப்புமுறையாகும்.

ஆனால் தண்டுவடமானது வெறும் செய்தியைக் கடத்தும் மையம் மட்டுமல்ல. தேவைக்கேற்ப தன்னிச்சையாவும் சில முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது. அதனையே நாம் உடன்வினை (reflex) என்கிறோம். உதாரணத்திற்கு காலில் ஒரு முள் குத்துகின்றது. இந்தச் செய்தி காலில் இருந்து தண்டுவடத்திற்குக் கடத்தப்பட்டு, பின் மூளைக்குச் சென்று அலசி ஆராய்ந்து பின் கிடைக்கப்பெறும் கட்டளை இயக்க நரம்புகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை அகற்றுவதற்குள் முள் காலுக்குள் நுழைந்து விடும்.

அதனால், தண்டுவடமே முள் குத்துவது போன்று ஒரு செய்தி வரும்பொழுது காலை எடுத்துவிடு என் தானே இயக்க நரம்புகளுக்குச் செய்தி கொடுத்து முள் குத்தாமல் தவிர்த்துவிடும். அப்படி அது முடிவெடுத்து செயல்படுத்தினாலும், மூளைக்குச் செய்தியைத் தெரிவிக்காமல் இருப்பதில்லை.

ஏனென்றால், அப்படி உடனுக்குடன் முடிவெடுத்து தீர்த்துவிடுவதால் மட்டும் பரிணாமத்தில் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியாது. பின்னர் ஒரு சமயம் இதே போன்று ஒரு நிகழ்வு வரும்பொழுது என்ன செய்வது என்று மூளைக்குத் தெரியாமலே போய்விடும். எனவே, வெளியில் ஏற்படும் தாக்குதல் அல்லது பாதிப்பு எத்தகையாதாக இருந்தாலும், அது கட்டாயம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்.

மூளையானது அதனைச் சரிப்படுத்த என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். உணரப்பட்ட அந்த வலியும் அதன் தீவிரமும் மூளையின் நினைவகத்தில் சேமிக்கப்படும். அதற்கேற்ற உணர்ச்சி வெளிப்பாடுகளும் இதனுடன் இணைக்கப்படும்.

வலி என்ற செய்தியானது மூளைக்குச் சென்றவுடன், அது தாலமஸ் (thalamus) என்ற பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அதனைப் பகுப்பாராய்வு செய்வதற்காக மேலும் சில பகுதிகளுக்கு அனுப்பப்படும். கார்ட்டெக்ஸின் (cortex)ன் சில பகுதிகள் அந்த வலி எங்கிருந்து வருகின்றது, இது போன்ற வலி ஏற்கனவே உணரப்பட்டுள்ளதா, வலி ஏற்படுத்திய பொருள் கூர்மையானதா, இதற்கு முன் இது போன்ற பொருள் தாக்கியுள்ளதா, உள்ளது என்றால் அவற்றை விட இது பரவாயில்லையா இல்லை மோசமா என்றெல்லாம் அலசி ஆராயப்படும்.

தாலமஸில் இருந்த லிம்பிக் அமைப்பிற்கும் (limbic system) இந்த செய்தி அனுப்பப்படும். லிம்பிக் அமைப்பானது மூளையின் உணர்ச்சி மையம். வலி மற்றும் ஏனைய செய்திகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகளை (Feelings) வெளிப்படுத்த இந்த அமைப்பு ஏதுவாகும். இந்த உணர்ச்சிகள் உணரப்படும் வலியோடு தொடர்பு படுத்திச் சேமிக்கப்படும். ஒவ்வொரு உணர்ச்சிகளும் ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளும். இதயத்துடிப்பு அதிகரித்தல், வியர்த்தல், உடல் நடுக்கம் என்பன போன்று.

பார்ப்பதற்கும் சொல்வதற்கும் எளிதாத் தோன்றினாலும், வலிஉணர்தல் என்பது உண்மையில் மிகச் சிக்கலான ஒரு நிகழ்வாகும். நரம்புமண்டலம் மூலம் இப்படித்தான் கடத்தப்படுகின்றது என்றாலும் அதனை உணர்வதில் பல்வேறு காரணிகள் செயல்படுகின்றன. உயிர் பயத்தில் ஒடும்பொழுது காலில் குத்தும் முள்ளின் வலி உணரப்படுவதில்லை. பிடித்தமானவரோடு ஆழ்ந்து பேசிக்கொண்டிருக்கையில் எறும்பு கடித்தால் தெரிவதில்லை. இங்கே நம் பழைய அனுபவங்களும் உணர்ச்சிகளும் சற்றே மந்தமாகிவிடுகின்றது.

ஆக, வலி என்பதை மூளையே தீர்மானிக்கிறது. ஓரிடத்தில் இருந்து தொடர்ந்து வலி வந்து கொண்டிருந்தால், நாளடைவில் மூளை அதனை ஆபத்தில்லை என்று உதாசீனப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

வலி உணர் நரம்புகள் பாதிக்கப்பட்டால் வலியை உணரமுடியாது. தீக்காயங்களில் நான்கு நிலைகள் உண்டு. இதில் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் (third and fourth degree) தோலின் dermis பகுதி அதாவது வலியுணரிகள் இருக்கும் பகுதி முழுமையாகப் பாதிக்கப்பட்டு விடும். அந்நிலையில் மட்டுமே வலி உணரப்படமாட்டாது.

No comments:

Post a Comment