மீனை எண்ணையில்தான் பொரிக்க முடியுமா, தண்ணீரில் முடியாதா?
முடியாது. ஏன் என்று பார்ப்பதற்கு முன்பு கொதிநிலை என்றால் என்னவென்று பார்த்து விடுவோம். எளிமையாகச் சொல்லிப் புரிந்துகொள்வது என்றால் இப்படிச் சொல்லலாம். ஒரு திரவமானது ஆவியாகத் தொடங்கும் வெப்பநிலையையே கொதிநிலை என்கிறோம். உதாரணமாக தண்ணீரின் கொதிநிலை 100°C என்று நமக்குத் தெரியும். அதாவது திரவ வடிவிலிருக்கும் தண்ணீர் நீராவியாக மாறுவதற்குத் தேவையான வெப்பநிலை 100°C ஆகும்.
இது திரவத்திற்குத் திரவம் அதன் வேதியல் பிணைப்பைப் பொறுத்து வேறுபடும். எண்ணையை எடுத்துக்கொண்டால் அதன் கொதிநிலையைச் சொல்வதில் சற்றுத் தடுமாற நேரிடும். காரணம், எண்ணை ஆவியாவதற்கு முன்பே புகையத் துவங்கிவிடும். இதனை ஆங்கிலத்தில் Smoke Point என்பார்கள். (தமிழில் புகைநிலை என்று சொல்லலாமா?) ஆலிவ் எண்ணை 191°Cயிலும், கடலையெண்ணை 227°Cயிலும் ஆவியாகத் துவங்கும். மேலும், இந்த மதிப்பானது எண்ணைகளின் தரத்தைப் பொறுத்து சற்றேறக்குறைய மாறுபடலாம்.
ஆக, மேலிரண்டில் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், தண்ணீரைவிட எண்ணையின் கொதிநிலை அதிகம் என்பது. மீனைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்தால், 100°Cல் மீனின் உடலில் உள்ள தண்ணீரும் கொதிக்க வைக்கப்படும் தண்ணீரும் ஒன்றாகத் தன் கொதிநிலையை எட்டி மீனின் உடலை வேக வைத்து விடும்.
அதே சமயம், மீனை எண்ணையில் போட்டுக் கொதிக்க வைத்தால், எண்ணை சூடாகித் தன் கொதிநிலையை எட்டும் முன்னரே மீனின் உடலில் உள்ள நீர் தன் கொதிநிலையை எட்டி ஆவியாகிவிடும். இப்பொழுது மீனின் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் போய் பொரிந்து விடுகின்றது.
சரி, இன்னொரு செய்தி, ஒரு திரவமானது ஆவியாகத் தொடங்கும் வெப்பநிலையையே கொதிநிலை என்கிறோம் என்று சொல்லியிருந்தேன். அதனை மிகத் தெளிவாக இப்படியும் சொல்லலாம்.
ஒரு நீர்மத்தின் ஆவியழுத்தத்தை (Vapour Pressure) நீர்மத்தைச் சூழ்ந்துள்ள வளியழுத்தத்திற்கு (Atmospheric Pressure) இணையாக்கும் வெப்பநிலையையே கொதிநிலை என்கிறோம்.
கடல்மட்டத்தில் நீரின் கொதிநிலை 100°C என்றால், அதுவே மலை உச்சியில் குறைந்து விடும். எவரெஸ்ட் மலை உச்சியில் நீரானது 69°Cலேயே ஆவியாகத் துவங்கிவிடும். காரணம், அங்கே வளியழுத்தம் குறைவு. ஆக, வளியழுத்தம் குறையக் குறைய நீரின் கொதிநிலை குறையும்.
இப்பொழுது இன்னொரு கேள்வி. அப்படியென்றால், விண்வெளியில் நீரின் நிலை என்ன? அங்கேதான் வளியழுத்தமே கிடையாதே. இதுவும் சற்று சிக்கலான கேள்விதான். விண்வெளியில் வளியழுத்தம் கிடையாது அதே சமயம் வெப்பநிலையும் குறைவு. அதாவது நீரின் உறைநிலைக்கு 0°C சற்றே கூட அவ்வளவுதான். கிட்டத்தட்ட 3°C இருக்கலாம்.
இப்பொழுது ஒரு விண்கலத்தினுள் இருந்து நீரை விண்வெளியில் விட்டால், முதலில் அது வளியழுத்தம் இல்லாத காரணத்தினால் உடனடியாக கொதிநிலையை எட்டி ஆவியாகிவிடும். பின்னர் உறைநிலை வெப்பம் இருக்கின்ற காரணத்தினால் மீண்டும் அதை உறைந்து பனிப்படிகமாக மாறிவிடும் (Crystal).
No comments:
Post a Comment